Oct 10, 2026
Thisaigal NewsYouTube

கோவில் பணத்தில் முறைகேடு புரிந்ததாக தலைவர், செயலாளர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கோவில் பணத்தில் முறைகேடு புரிந்ததாக தலைவர், செயலாளர் கைது

மலாக்கா, ஜூன்.18-

மலாக்காவில் உள்ள ஒரு கோவில் நிர்வாகத்திற்குச் சொந்தமான 50 ஆயிரம் ரிங்கிட் பணத்தைக் கூட்டாக சேர்ந்து முறைகேடு புரிந்ததாகக் கூறப்படும் அந்த கோவிலின் தலைவரும், செயலாளரும் கைது செய்யப்பட்டனர்.

61 வயதுடைய தலைவர் மற்றும் 75 வயதுடைய செயலாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவல் ஆடையில் இன்று காலை 9 மணியளவில் மலாக்கா, ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்துப்பட்டு, அவ்விருவரையும் 6 நாட்களுக்குத் தடுத்து வைப்பதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், நீதிமன்ற அனுமதியைப் பெற்றது.

கோவில் தலைவரும், செயலாளரும் கைவிலங்கிடப்பட்ட நிலையில் மாஜிஸ்திரேட் உத்மான் அப்துல் கானி முன்னிலையில் நிறுத்தப்பட்டனர். அவர்களை வரும் ஜுன் 23 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கான ஆணையை நீதிபதி பிறப்பித்தார்.

கோவில் பணம் 50 ஆயிரம் குறைந்தது குறித்து எஸ்பிஆர்எம்மிடம் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தலைவரும், செயலாளரும் நேற்று காலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், வாக்குமூலம் பதிவுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

கோவில் நிர்வாகத்தின் அங்கீகாரமின்றி வங்கியிலிருந்து 50 ஆயிரம் ரிங்கிட்டை மீட்டு, இருவரும் பகிர்ந்துக் கொண்டு, கபளிகரம் புரிந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு புரியப்பட்ட இந்த முறைகேடு தொடர்பில் அந்தப் பணம் இருவரின் சுயத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டதாக எஸ்பிஆர்எம் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →