சிப்பாங், அக்டோபர்.04-
இஸ்ரேலியப் படைகளின், பிடியில் இருக்கும், குளோபல் சுமுத் புளோட்டிலா கப்பலைச் சேர்ந்த 23 மலேசியர்கள், அடுத்த 48 மணி நேரத்தில் விடுவிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
துருக்கியப் பிரதமர் Recep Tayyip Erdogan உடன் மலேசியப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நடத்திய தொடர் பேச்சு வார்த்தைகளை அடுத்து, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுமுத் நுசாந்தாரா புளோட்டிலா கட்டளை மையத்தின் தலைவர் டத்தோ டாக்டர் சானி அராபி அலிம் தெரிவித்துள்ளார்.
23 மலேசியர்களும் பாதுகாப்பாக நாடு திரும்ப, துருக்கி, கத்தார் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் உச்சக் கட்ட பேச்சு வார்த்தைகளை அன்வார் நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இப்பேச்சு வார்த்தைகள் வெற்றியடையும் பட்சத்தில், 23 மலேசியர்களும், அன்காரா அல்லது இஸ்தான்புல் வழியாக மலேசியாவை வந்தடைவார்கள் என்றும் சானி அராபி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, 23 மலேசியர்களும் நாடு திரும்பும் வரையில், அவர்களின் குடும்பத்தினர் தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு உடனுக்குடன் தகவல்கள் அளிக்கப்பட்டு வருவதாகவும் சானி அராபி குறிப்பிட்டுள்ளார்.








