May 5, 2026
Thisaigal NewsYouTube
சமூக ஊடக ‘நீதிமன்றங்களால்’ எஸ்பிஆர்எம் சவால்களை எதிர்கொள்கிறது: டத்தோ ஸ்ரீ அஹ்மாட் குசைரி கவலை
தற்போதைய செய்திகள்

சமூக ஊடக ‘நீதிமன்றங்களால்’ எஸ்பிஆர்எம் சவால்களை எதிர்கொள்கிறது: டத்தோ ஸ்ரீ அஹ்மாட் குசைரி கவலை

Share:

கெந்திங், பிப்ரவரி.13-

ஊழல் வழக்குகள் விசாரணையில் இருக்கும் போதே, சமூக ஊடகங்கள் மூலம் தீர்ப்பு வழங்கப்படுவது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மிற்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளதாக அதன் செயலாக்கத் துணைத் தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் குசைரி யஹாயா தெரிவித்தார்.

முறையான ஆதாரங்கள் திரட்டப்படும் முன்பே, சமூக ஊடகங்களில் பரப்பப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் போலித் தோற்றங்கள் பொதுமக்களிடையே தேவையற்ற சந்தேகங்களை உருவாக்குவதோடு, ஆணையத்தின் நற்பெயரையும் பாதிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

எஸ்பிஆர்எம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத போது சில தரப்பைப் பாதுகாப்பதாகக் குற்றம் சாட்டப்படுவதையும், அதே சமயம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் போது அது 'அரசியல் பழிவாங்கல்' என முத்திரை குத்தப்படுவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இத்தகைய இக்கட்டான சூழலிலும், சமூக ஊடக அழுத்தங்களுக்கோ அல்லது பொதுமக்களின் உணர்ச்சிவசப்பட்ட கருத்துக்களுக்கோ அடிபணியாமல், சட்டத்தின் ஆட்சி மற்றும் முறையான ஆதாரங்களின் அடிப்படையிலேயே ஆணையம் தனது பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும் என டத்தோ ஶ்ரீ அஹ்மாட் குசைரி உறுதிபடத் தெரிவித்தார்.

"லஞ்ச ஊழலைத் தடுப்பதிலும் எதிர்ப்பதிலும் எஸ்பிஆர்எம்மின் பங்கை புரிந்து கொள்ளுதல்" என்ற தலைப்பில் பத்திரிகையாளர்களுக்காக கெந்திங் ஹைலண்ட்ஸில் நடத்தப்பட்ட பயிலரங்கின் நிறைவு விழாவை இன்று அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்து உரையாற்றுகையில் அஹ்மாட் குசைரி இதனை விவரித்தார்.

மேலும், பொறுப்பற்ற ஊடக அறிக்கைகள் மற்றும் திட்டமிட்டு உருவாக்கப்படும் சமூக ஊடக வெறுப்புப் பிரச்சாரங்கள் சாட்சிகளின் பாதுகாப்பிற்கும், நீதித்துறை நடைமுறைகளுக்கும் அச்சுறுத்தலாக அமையலாம் என அவர் எச்சரித்தார்.

உண்மையான புலனாய்வு ஊடகத்துறை சுதந்திரத்தை மதிப்பதாகக் குறிப்பிட்ட அஹ்மாட் குசைரி, பரபரப்பிற்காகச் செய்யப்படும் செய்திகள் நீதியைச் சீர்குலைக்கும் என்பதால், ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று தமதுரையில் வலியுறுத்தினார்.

Related News