லங்காவி, செப்டம்பர்.19-
நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான லங்காவி தீவில், அண்மைய மலேசிய தினக் கொண்டாட்டம், தற்போதைய பள்ளித் தவணை விடுமுறை காலத்தில் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை 39 விழுக்காடு வரை சரிவு கண்டு இருப்பதாகக் கூறப்படுவதை ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர் மறுத்துள்ளார்.
இது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்றும், விமான நிலையம் மற்றும் இதர அதிகாரத்துவ தரவுகளின்படி, இந்தக் குற்றச்சாட்டு முரணானது என்றும் கெடா மாநில சுற்றுலா, கலை, கலாச்சார ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சாலே சைடின் தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தொடங்கிய பள்ளித் தவணை விடுமுறையில் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது. சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், ஹோட்டல் நடந்துநர்கள், வாடகைக் கார் நடத்துநர்கள் மூலம் இந்தத் தகவலை அறிய முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.








