ஜாசின், ஜனவரி.05-
லைசென்ஸின்றி சட்டவிரோதமாகத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த ஒரு பெண் உட்பட மூவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று, மலாக்கா, பெம்பானில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில் ஒரு பெண்ணும் இரண்டு ஆண்களும் பிடிபட்டதாக ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் லீ ராபர்ட் தெரிவித்தார்.
தங்களுக்குக் கிடைத்த உளவுத் தகவலைத் தொடர்ந்து போலீஸ் குழு ஒன்று மாலை 5.20 மணியளவில் சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனையிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சோதனையின் போது ஒரு துப்பாக்கி மற்றும் பல வகையான தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணைக்காக 54, 45 வயது இரு ஆடவர்களையும், 22 வயது பெண்ணையும் போலீசார் தடுத்து வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.








