மலாக்கா மாநிலத் தேர்தலை முன்னிட்டு, பேச்சுவார்த்தை மற்றும் அரசியல் ஒத்துழைப்பை உருவாக்கும் செயல்முறை ஆகியவை, முந்தைய ஜொகூர் மாநிலத் தேர்தலின் போது இருந்த சூழலை விட எளிதாக இருக்கும் என்று பாஸ் நம்பிக்கை கொண்டுள்ளது.
அடித்தள நிலையில் கிடைத்த சாதகமான கருத்துகள் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நம்பிக்கை அமைந்துள்ளதாக பாஸ் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தெரிவித்தார்.
"இறைவன் அருளால், அது சாத்தியமே... ஜொகூரில் தேர்தல் சூழல் மிகவும் சிக்கலானதாக இருந்த நிலையில், மலாக்காவில் சூழல் எளிதாக இருக்கும்," என்று இன்று மஸ்ஜித் ருசிலா-வில் சொற்பொழிவை ஆற்றிய பின் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு தெரிவித்தார்..
மலாக்கா மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள பாரிசான் நேஷனல் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த பக்காத்தான் ஹராப்பான் தயாராக இருப்பதாக கடந்த புதன்கிழமையன்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், மலாக்கா முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரவூப் யுசோப் உடனான கலந்தாலோசனையின் அடிப்படையில் இது குறித்து முடிவு செய்யப்படும் என பக்காத்தான் ஹராப்பான் தலைமைச் செயலாளர் டத்தோ ஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரிக்காத்தான் நேஷனல் மற்றும் பாரிசான் நேஷனல் இடையிலான ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் குறித்து கருத்து தெரிவித்த அப்துல் ஹாடி, நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் பேச்சுவார்த்தை இன்னும் தொடர்வதாக தெரிவித்தார்.
பாரிசான் நேஷ்னலிடமிருந்து ஒரு சாதகமான போக்கு காணப்படுகிறது; அதன் தலைமை மற்றும் உறுப்பினர்கள் பெரும்பாலோர் இந்த ஒன்றிணைப்பு முயற்சியை ஆதரிக்கின்றனர்.
ஆக, நாங்கள் இன்னும் விவாதித்து வருகிறோம். எங்கள் பிரதிநிதிகள் பெரிக்காத்தான் நேஷனல்-உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பாரிசான் நேஷனல்-க்குள் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், பெரும்பான்மையானவர்கள் பெரிக்காத்தான் நேஷனல் உடனான ஒத்துழைப்புக்கு உடன்படுவதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பாரிசான் நேஷனல் - பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து செயல்படத் தீர்மானித்தால் பாஸ்-இன் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று கேட்கப்பட்டபோது, அது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்பதால் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.








