கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் மற்றும் அனைத்துலக நுழைவு மையங்களில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது;
இருப்பினும், பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியில் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையான எ.கே.பி.எஸ் -க்கு முன்னிலை அளிக்கப்பட வேண்டும் என துறைசார் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதேவேளையில், அமைப்புக்குள்ளேயே நடைபெறும் முறைகேடுகள் தடுக்கப்படாவிட்டால், வெறும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மட்டும் போதுமானதாக இருக்காது என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
குடிநுழைவுத் துறை, சுங்கத் துறை, காவல்துறை மற்றும் விமான நிலையப் பாதுகாப்புப் பிரிவு போன்ற அரசு
அமைப்புகள் தனித்தனியாகச் செயல்படுவதைத் தவிர்த்து, ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதிசெய்ய தெளிவான கட்டளை மற்றும் ஒருங்கிணைப்பு கட்டமைப்பு அவசியம் என்று குற்றவியல் ஆய்வாளரும் நிபுணருமான டத்தோ ஷாஹுல் ஹமீத் அப்துல் ரஹீம் வலியுறுத்தியுள்ளார்.
எ.கே.பி.எஸ்-ஐ முதன்மை முகமையாகப் பரிந்துரைப்பதற்கான மிகத் தெளிவான காரணம் என்னவென்றால், அது ஏற்கனவே சுங்கம், குடிநுழைவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பணிகளைக் கவனித்து வருகிறது.
"எ.கே.பி.எஸ் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுவதால், பாதுகாப்பு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு விவகாரங்களும் அதே அமைச்சகத்தின் வரம்பிற்குள் வருகின்றன.
"எனவே, விமான நிலையத்திற்குள் வருபவர்கள் மற்றும் அங்கிருந்து வெளியேறுபவர்களின் நிர்வாகத்தை ஒருங்கிணைக்கவும் கண்காணிக்கவும், எ.கே.பி.எஸ்-ஐ முதன்மை முகமையாக நியமிப்பதே பொருத்தமானதாக இருக்கும், என்று டத்தோ ஷாஹுல் ஹமீத் தெரிவித்தார்.








