கடந்த 2021 முதல் 2023 வரை தாம் பணி புரிந்த நிறுவனத்தின் சொத்துகளைத் தவராகப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட 44 வயது எம் விஜயராணி இன்று பட்டர்வர்த் செஷன் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட 39 குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
மூன்றரை லட்சத்தும் மேலான மதிப்பிலான நிறுவன சொத்துகளை கடந்த 2021 ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் 2023 மே 25 வரையில் செபெராங் பெராய் தெங்ஙா, தாமான் இன்டெராவாசிஹ் பெராய், ஜாலான் சாயின் ஃபெரியில் செயல்பட்டு வரும் பாதுகாவலர் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாகப் பணி புரிந்து வந்த எம் விஜயராணி, மோசடி செய்ததாக நீதிபதி சுல்ஹல்மி அப்துல்லா முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
மிகப் பெரிய தொகையை உட்படுத்திய இந்த வழக்கு தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட விஜயராணிக்கு ஜாமின் வழங்கப்படக் கூடாது என துணை பப்ளிக் புராசிகியூட்டர் வான் அமிரா ருசைடி வான் அப்துல் ரசாக் தெரிவித்தார்.
ஆனால், 74 வயது தாயாரையும், 10 மற்றும் 11 வயது பிள்ளைகளைப் பராமறித்து வரும் தனித்து வாழும் தாயாரான விஜயராணிக்கு குறைந்தபட்ச ஜாமீனைக் கோரினார் விஜயராணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி ஷன்முகம்
ரிம5,000 மற்றும் அதற்கு மேல் மாத வருமானம் கொண்ட இரண்டு ஜாமீன்களுடன் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ரிம87,000 ஜாமீன் அனுமதித்தார் நீதிபதி சுல்ஹல்மி. மேலும் இவ்வழக்கு முடியும் வரை விஜயராணியின் கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனையையும் அவர் விதித்தார்.
இந்த வழக்கு, அடுத்த மாதம் 24 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.








