இந்திய சமூகத்தின் சமூகவியல் பொருளாதார உருமாற்றுப் பிரிவான மித்ரா, நாடு முழுவதும் 167 பாலர்பள்ளிகளுக்கு உதவும் நோக்கில் ஒரு கோடியே 8 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அதன் சிறப்புப்பணிக்குழுத் தலைவர் டத்தோ ரா. ரமணன் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் பதிவுப்பெற்ற தனியார் பாலர் பள்ளிகளில் பி40 தரப்பைச் சேர்ந்த குழந்தைகள் தொடக்க மழலையர் கல்வியை பெறுவதற்கு இந்த உதவித் திட்டத்திற்கு மேற்கண்ட தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.
பி40 தரப்பு குழந்தைகளின் மாதந்திர கட்டணம், அவர்களுக்கு காலை சிற்றுண்டி ஆகிய செலவினத்தை இந்த நிதி ஒதுக்கீடு உள்ளடக்கி இருப்பதாக டத்தோ ரமணன் தெரிவித்தார்.
மேற்கண்ட மழலையர் கல்வித் திட்டத்தின் அமலாக்கத்தை பார்வையிடும் நோக்கில் டமான்சாரா டாமாய், அபாட்மென்ட் ஹர்மோனி, புளோக் சி யில் உள்ள தடிக்கா சிந்தா இல்மு பக்தி பாலர் பள்ளிக்கு திடீர் வருகை புரிந்த போது டத்தோ ரமணன் இதனை தெரிவித்தார்.
நாடு முழுவதும் 167 பாலர் பள்ளிகள் சம்பந்தப்பட்டுள்ள இத்திட்டத்தில் 4 ஆயிரத்து 441 மாணவர்கள் பயில்கின்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் தோறும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 200 வெள்ளி உதவித்தொகை அவர்களின் பள்ளி கட்டணம் மற்றும் உணவு ஆகியவற்றை உள்ளடக்கியிருப்பதாக டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.








