கோலாலம்பூர், ஜனவரி.16-
அமைதி பேரணிச் சட்டத்தின் முக்கியப் பிரிவு அரசியலமைப்புக்கு விரோதமானது என உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை அரசுத் தலைமை வழக்கறிஞர் அலுவலமான ஏஜிசி இன்று அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெற்றுக் கொண்டது.
2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம், அப்போதைய தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, அமைதியான பேரணிச் சட்டத்தின் பிரிவு 9-ஐ ரத்து செய்தது.
இந்தப் பிரிவின் கீழ், ஒரு பேரணிக்கு 5 நாட்களுக்கு முன்னதாகக் காவல் துறையிடம் அறிவிப்பு வழங்கத் தவறினால் அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டிருந்தது. இது கூட்டத்தைக் கூட்டும் அடிப்படை உரிமையைப் பாதிப்பதாகக் கூறி நீதிமன்றம் அதனைச் செல்லாது என அறிவித்தது.
இந்த வரலாற்றுப்பூர்வமான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று அறிவித்த ஏஜிசி, அதனை மீட்டுக் கொள்வதாக இன்று அறிவித்துள்ளது.








