மலாக்கா, ஆகஸ்ட்.14-
மலாக்கா, கோத்தா ஷாபண்டாரில் உள்ள கொண்டோமினியம் வீடமைப்புப் பகுதியில் உள்ள ஹோம்ஸ்டேய் வீட்டில் தங்கியிருந்த ஆடவர் ஒருவர், 27 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து மரணமுற்றார்.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் நிகழ்ந்தது. 24 வயதுடைய அந்த நபர், 21 வயதுடைய தனது வருங்கால மனைவியுடன் நேற்று நள்ளிரவு, அந்த வீட்டில் தங்குவதற்குப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
அந்த ஆடம்பர அடுக்குமாடி வீட்டின் எட்டாவது மாடியில் உள்ள நீச்சல் குளத்தில் பலத்த சத்தத்துடன் பெரும் அதிர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து குடியிருப்பாளர்கள் இந்தச் சம்பவம் குறித்து உணர்ந்ததாகத் தெரிய வந்துள்ளது.
ஆடவர் ஒருவர் நீச்சல் குளத்துக்குள் கிடப்பதைக் பார்த்த ஒருவர், உதவும் நோக்கில் உடனடியாக போலீசுக்குத் தகவல் கொடுத்தார். எனினும் கீழே விழுந்ததில் பலத்த அடி ஏற்பட்டு, அந்த ஆடவரின் கை துண்டான நிலையில் மரணமுற்றது உறுதிச் செய்யப்பட்டது.
சம்பவம் நிகழ்வதற்கு முன்னதாக, அந்த நபர், வீட்டின் கதவை யாரோ தட்டுவதாகத் தனது வருங்கால மனைவியிடம் தெரிவித்து இருக்கிறார். அதன் பின்னர் அவர் தனியொரு நபராகக் கீழ் மாடிக்குப் படிகட்டின் வழியாக இறங்கியதாகக் கூறப்படுகிறது.
அந்த ஆடவரின் இறப்பு திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்டப்பர் பாதிட் தெரிவித்தார்.








