பினாங்கு, நவ. 26-
குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்கி வரும் IndiGo விமான நிறுவனம், வரும் டிசம்பர் 21 ஆம் தேதி முதல் சென்னைக்கும் பினாங்கிற்கு மேற்கொள்ளவிருக்கும் நேரடி விமானச் சேவையானது, பினாங்கிற்கும், சென்னைக்கும் இடையிலான தூதரக உறவை வலுப்படுத்துவதுடன், இரு தரப்பினருமே மிகப்பெரிய அளவில் நன்மை பெற முடியும் என்று பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னைக்கும், பினாங்கிற்கும் இடையில் வாரத்தில் மூன்று நாள் மட்டுமே நேரடி விமானச் சேவை என்று முன்பு கூறப்பட்டது. ஆனால், டிசம்பர் 21 ஆம் தேதி முதல் இவ்விரு வழிதடத்திற்கும் இடையே தினசரி விமானச் சேவை மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பது பினாங்கில் உள்ள வர்த்தக சமூகத்திற்கு மிகப்பெரிய அனுகூலமாகும் என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார்.
தமிழகத்துடன் வர்த்தகத் தொடர்பு வைத்துள்ள பினாங்கு வர்த்தகர்கள், காலையில் புறப்பட்டு, அன்றிரவே திரும்புவதற்குரிய சூழலை IndiGo விமான நிறுவனம் மூலமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பெரும் முயற்சியினை எடுத்துக்கொண்டுள்ள பினாங்கு மாநில சுற்றுலா மற்றும் படைப்பாக்கப் பொருளாதாரம் ஆட்சிக்குழு உறுப்பினர் வோங் ஹோன் வாய்க்கு தமது பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதாக டத்தோஸ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார்.

பினாங்கிற்கும், சென்னைக்கும் இடையிலான விமானச் சேவை தொடக்க அறிமுக நிகழ்வு, நேற்று ஆட்சிக்குழு உறுப்பினர் வோங் ஹோன் வாய் முன்னிலையில் நடைபெற்ற போது, டத்தோஸ்ரீ சுந்தராஜு மேற்கண்டவாறு கூறினார்.
பினாங்கிற்கான இந்த புதிய வழித்தடம், வர்த்தக சமூகத்திற்கு மட்டுமின்றி பினாங்கு மாநில சுற்றுலாத்துறைக்கும் பெரும் ஊக்குவிப்பாக அமையும் என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு நம்பிக்கை தெரிவித்தார்.
IndiGo விமான நிறுவனத்தின் இந்த புதிய வழித்தடமானது, கோலாலம்பூர் மற்றும் லங்காவிக்குப் பிறகு மலேசியாவிலிருந்து நேரடி விமான சேவையைப்பெறும் மூன்றாவது இடமாக பினாங்கையும் இணைத்துள்ளது.
டிசம்பர் 21 ஆம் தேதியிலிலிருந்து IndiGo 6E1045 முதல் விமானம், சென்னையில் இருந்து உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:15 புறப்பட்டு, மலேசிய நேரப்படி காலை 8:30 மணிக்கு பினாங்கை வந்தடையும்.

பினாங்கில் இருந்து திரும்பும் விமானம் காலை 9:30 மணிக்கு புறப்பட்டு உள்ளூர் நேரப்படி காலை 10:35 மணிக்கு சென்னையைச் சென்றடையும் என்று IndiGo விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியாளர் கூட்டத்தில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன், பெங்காலான் கோத்தா சட்டமன்ற உறுப்பினர் வோங் யூ ஹர்ங், கெபுன் பூங்கா சட்டமன்ற உறுப்பினர் லீ பூன் ஹெங், பினாங்கு மாநாடு மற்றும் கண்காட்சி பணியகத்தின் தலைமை செயல் அதிகாரி அஷ்வின் குணசேகரன் உட்பட பல மாநில பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.








