ஜோகூர் யூடிசியில் அமைந்துள்ள குடிநுழைவுத் துறை அலுவலகத்தில் மாது ஒருவருக்கு மலாய் மொழி சரளமாகப் பேச முடியாததால் அவரது கடப்பிதழ் புதிப்பிப்பது தடுத்து வைக்கப்பட்டது குறித்து உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தற்காத்து பேசி இருக்கிறார்.
தேசிய மொழியில் சரளமாக பேச முடியாத நிலையில், சம்பந்தப்பட்ட நபரின் குடியுரிமை நிலை குறித்து சந்தேகம் எழுந்திருக்கக் கூடும். ஆகையால், குடிநுழைவுத் துறை அதிகாரி அவ்வ்வாறான நடவடிக்கை முன்னெடுத்திருக்கலாம் என்று சைபுதீன் கூறினார்.
அரசியலமைப்புச் சட்டப்படி, மலாய் மொழி நம் நாட்டு தேசிய மொழி. மற்ற மொழிகளைப் படிக்கலாம், பயன்படுத்தலாம். ஆனால், தேசிய மொழி அடிப்படையானத் தேவை ஆகும்.
அண்மையில், ஜோகூர் யூடிசியில் கடப்பிதழ் புதுப்பிக்க முடியாத நிலை குறித்து மாது ஒருவர் சமூக வலைத்தளத்தில் தமது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
தனது மகளின் கடப்பிதழைப் புதுப்பிக்க வந்த போது, மலாய் மொழியில் சரளமாக பேசாததற்காக, குடிநுழைவு அலுவலகத்தில் அதிகாரி ஒருவர் தன்னை திட்டியதாக அந்த பெண் கூறினார்.








