ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட்.25-
கடந்த பிப்ரவரி மாதம் பினாங்கு, சுங்கை பாக்காப்பில் நிகழ்ந்த கோர விபத்தில் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு உடன்பிறப்புகளுக்கு பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு, வாக்குறுதி அளித்ததைப் போல 42 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள வீட்டை வாங்கிக் கொடுத்துள்ளார்.

இவ்விபத்தில் 7 வயது சிறுவன் தர்ஷன் இடது கையை இழந்தார். அவரின் 5 வயது தங்கை கவர்ஜிதா, வலது கால் முட்டிக்குக் கீழே இழந்தார்.
அவ்விரு உடன்பிறப்புகளின் வாழ்க்கையே சூனியமாகிய நிலையில், அவர்களின் எதிர்காலத்தை முக்கியமாகக் கருத்தில் கொண்டு சுங்கைப் பாக்காப், பண்டார் தாசெக் முத்தியாராவில் மூன்று அறைகள் மற்றும் இரண்டு குளியல் அறைகள் வசதிகளுடன் மாற்றுத் திறனாளிகளுக்கு நட்புறவான சூழலில் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு வீட்டை டத்தோ ஶ்ரீ சுந்தராஜு வாங்கித் தந்துள்ளார்.

அவ்விரு உடன்பிறப்புகளின் எதிர்காலத்தை முன்னிட்டு பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் நடவடிக்கைக் குழுத் தலைவர் என்ற முறையில் தாமும் பள்ளி நிர்வாகம், மாநில கல்வி இலாகா ஆகிய தரப்பின் ஒத்துழைப்புடன் நண்பர்கள், சில நல்லுள்ளங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை திரட்டப்பட்ட நன்கொடை இரண்டு லட்சத்து 22 ஆயிரம் ரிங்கிட்டாகும்.
பினாங்கு மாநிலத்திற்கு வீடமைப்புக்குப் பொறுப்பேற்றுள்ள ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற முறையில் முத்தியாராகூ வீடமைப்புத் திட்டத்தில் அந்த இரு உடன்பிறப்புகளுக்காகச் சொந்த வீட்டைப் பெற்றுத் தருவதற்கு 42 ஆயிரம் ரிங்கிட் விலையில் வாங்கப்பட்டுள்ளது.

வயது குறைவு காரணமாக தற்போது அந்த சிறார்களின் பாட்டியான எம். அமிர்தம் பெயரில் அவ்வீடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் 18 வயதை அடையும் போது அந்த வீடு அவர்களின் பெயருக்கு மாற்றப்படும் என்று டத்தோ ஶ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.
எஞ்சிய ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட் அமானா ராயாவில் சேர்க்கப்பட்டுள்ளது. அந்தப் பிள்ளைகளின் செலவினத்திற்கு மாதம் தோறும் 1,500 ரிங்கிட் வழங்கப்படும்.

இரு பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அந்த இரு உடன்பிறப்புகளிடம் அவர்களின் சொந்த வீட்டை ஒப்படைக்கும் நிகழ்வில் டத்தோ ஶ்ரீ சுந்தராஜு இவ்வாறு தெரிவித்தார்.
எவ்விதக் கடனும் இல்லாமல் இந்த வீட்டை வாங்கிக் கொடுத்தது மூலம் கடனில்லாத வாழ்க்கையையும், சிறந்த வாழ்வாதார நிலையையும் அவர்களால் உருவாக்கிக் கொள்ள முடியும் என்று டத்தோ ஶ்ரீ சுந்தராஜு நம்பிக்கை தெரிவித்தார்.

இவ்விரு பிள்ளைகளின் வருங்காலத்திற்கு நன்கொடை வழங்கி உதவி செய்த அனைவருக்கும் டத்தோ ஶ்ரீ சுந்தராஜு தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.








