அந்நிய நாட்டுப் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் இக்கொலையில் சம்பந்தப்பட்டு இருக்கக்கூடும் என்று நம்பப்படும் இரு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜோகூர்பாரு, தாமான் உங்கு தும் அமினாவில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்த இக்கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட அந்த இரு நபர்களும் புலன் விசாரணைக்கு ஏதுவாக 7 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையை பெற்றுள்ளனர் என்று ஜோகூர்பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பல்வீர் சிங் மஹின்டர் சிங் தெரிவித்தார்.
அந்நிய நாட்டைச் சேர்ந்த 41 வயது பெண்ணும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் தம்பியான 24 வயது நபரும் கைது செய்யப்பட்டு, இக்கொலைக்கு அவர்கள் பயன்படுத்தியதாக நம்பப்படும் ஒரு கத்தியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஏசிபி பல்வீர் சிங் குறிப்பிட்டனர்.
கொலை செய்யப்பட்ட 41 வயதுடைய பெண்ணின் சடலம், குப்பைத் தொட்டி ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொது மக்களால் கண்டு பிடிக்கப்பட்டதாக ஏசிபி பல்வீர் சிங் தெரிவித்தார்.








