Dec 13, 2025
Thisaigal NewsYouTube
யுஇசி கல்விச் சான்றிதழை அங்கீகரிப்பதில் பிரதமர்  துணிந்து முடிவு எடுக்க வேண்டும்: களத்தில் குதித்தது சீனக் கல்வி அமைப்பான டோங் ஸோங்
தற்போதைய செய்திகள்

யுஇசி கல்விச் சான்றிதழை அங்கீகரிப்பதில் பிரதமர் துணிந்து முடிவு எடுக்க வேண்டும்: களத்தில் குதித்தது சீனக் கல்வி அமைப்பான டோங் ஸோங்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.13-

யுஇசி எனப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட கல்விச் சான்றிதழை அங்கீகரிப்பதில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், துணிந்து முடிவு எடுக்க வேண்டும் என்று மலேசிய சீன சமூகத்தின் கல்வி அமைப்பான டோங் ஸோங் வலியுறுத்தியுள்ளது.

நாங்கள் பிரதமரிடம் அனுதாபத்தைத் தேடவில்லை. ஆனால், யுஇசி ஒருங்கிணைக்கப்பட்ட கல்விச் சான்றிதழைப் பிரதமர் அங்கீரிக்க வேண்டும் என்று சீனப்பள்ளிகளின் கல்வி அரணாக விளங்கி வரும் டோங் ஸோங் தனது நிலைப்பாட்டை இன்று தெளிவுப்படுத்தியது.

யுஇசி என்பது நாட்டில் உள்ள சீனத் தனியார் இடைநிலைப்பள்ளிகள் நடத்தி வரும் மாணவர்களுக்கான Unified Examination Certificate என்ற ஒருங்கிணைக்கப்பட்ட கல்விச் சான்றிதழ் கல்வி முறையாகும்.

அரசாங்கப் பொதுப் பல்கலைக்கழங்கள் மற்றும் உயர்க்கல்விக்கூடங்களில், சீனத் தனியார் இடைநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்வதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட கல்விச் சான்றிதழ் முறையை அரசாங்கம் அங்கீரிக்க வேண்டும் என்று சீன சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மலேசியாவில் பல ஆண்டு காலமாக சர்ச்சைக்குரிய விவகாரமாக பார்க்கப்படும் UEC சான்றிதழ் முறை, தேசிய தரநிலைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றும், மலாய் மொழியைப் போதனைக்கான முதன்மை ஊடகமாகக் கொண்டிருக்கவில்லை என்றும் விமர்சகர்கள் வாதிட்டு வருகின்றனர்.

இது குறித்து நேற்று கருத்துரைத்த பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மலாய் மொழி, தேசிய மொழியாகும், அனைத்து கல்விக் கழகங்களும் மலாய் மொழி கொள்கையை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் UEC சான்றிதல் முறைக்கு அங்கீகாரம் வழங்கி, ஓர் இரட்டைக் கல்வி முறையை உருவாக்கி, இனப் பிரிவினையை வலுப்படுத்தும் முயற்சிக்குத் துணை நிற்க முடியாது என்று அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பிரதமர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

காரணம், இந்தக் கல்விச் சான்றிதழ் முறையானது, பல தசாப்த காலமாக தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளைப் பலவீனப்படுத்தி விடும் என்று பிரதமர் அச்சம் தெரிவித்துள்ளார்.

UEC சான்றிதழ் வைத்திருப்பவர்கள், பொதுப் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு எஸ்பிஎம் தேர்வில் மலாய் மொழி மற்றும் வரலாற்றுப் பாடங்களில் தேர்ச்சி பெற வேண்டும் போன்ற நிபந்தனைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

UEC சான்றிதழ், இங்கிலாந்து, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற உலகெங்கிலும் உள்ள பல புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆனால் மலேசியப் பொதுப் பல்கலைக்கழகங்களாலோ அல்லது அரசாங்க வேலை வாய்ப்பிற்கோ ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பது முரண்பாடாக உள்ளது என்பது சீன சமூகத்தின் வாதமாகும்.

சுருங்க சொன்னால் சபா, சரவாக் போன்ற மாநிலங்கள் UEC சான்றிதழை மாநில அளவிலான அரசாங்க வேலை வாய்ப்பு மற்றும் உதவித் தொகைகளுக்காக ஏற்றுக் கொண்டு இருக்கும் போது மத்திய அரசாங்கம் மட்டும் இந்த நிலைப்பாட்டிலிருந்து வேறுபாட்டிருப்பது ஏன் என்று சீன சமூகம் கேள்வி எழுப்பியுள்ளது.

எனினும் சீன சமூகத்தைச் சேர்ந்த நிபுணத்துவ ஆள்பலங்களை மலேசியா தொடர்ந்து இழப்பதற்கு முன்னதாக UEC சான்றிதழ் முறையை அங்கீகரிப்பதில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் துணிந்து முடிவெடுக்க வேண்டும் என்று டோங் ஸோங் கல்வி அமைப்பின் தலைவர் டான் யியூ சிங் வலியுறுத்தியுள்ளார்.

Related News