பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்.16-
கடந்த செவ்வாய்க்கிழமை பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமாவில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் நான்காம் படிவம் மாணவி, மாணவன் ஒருவனால் கத்தியால் குத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தனது மகளின் உடலில் கிட்டத்தட்ட 200 கத்திக் குத்துக் காயங்கள் காணப்பட்டன என்று அந்த மாணவியின் மனம் உடைந்த தாயார் கண்ணீர் மல்கக் கூறினார்.
மகளின் உடலில் சவப் பரிசோதனை நடத்திய பெட்டாலிங் ஜெயா, மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையின் சவப் பரிசோதனை நிபுணர் இவ்விவரத்தை அம்பலப்படுத்தியதாக வோங் லீ பிங் என்ற அந்த தாயார் கூறினார்.
அதே வேளையில் இந்தச் சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் நிறைய தகவல்கள் பொய்யானவை என்றும் அவை இட்டுக் கட்டப்பட்ட கதைகள் என்றும் அவர் கூறினார்.
இத்தகைய பொய்யான கதைகள் , தங்களை மேலும் சோகத்திலும், வருத்தத்திலும் ஆழ்த்துகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
மகளைப் பறிகொடுத்த இழப்பில் குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் இட்டுக் கட்டப்பட்டக் கதைகள், தங்கள் இதயத்தை மேலும் ரணமாக்கி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
16 வயதுடைய தனது மகளின் கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில்தான் அதிகமான கத்திக் குத்துக் காயங்கள் தென்பட்டன என்று கோலாலம்பூர் நிர்வானா மையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அந்த தாய் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.








