Oct 18, 2026
Thisaigal NewsYouTube

பங்களா வீட்டில் நடந்த துணிகரக் கொள்ளை / இரண்டு இந்திய இளைஞர்கள் சிக்கினர் / மேலும் 8 பேருக்கு வலைவீச்சு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பங்களா வீட்டில் நடந்த துணிகரக் கொள்ளை / இரண்டு இந்திய இளைஞர்கள் சிக்கினர் / மேலும் 8 பேருக்கு வலைவீச்சு

கிள்ளான்,அக்டோபர் 05-

கிள்ளான், பாண்டமாரன், ஜாலான் ஜகோங்-கில் உள்ள ஓர் இந்தியரின் பங்களா வீட்டில், பாராங் முனையில் முகமூடி கொள்ளையர்கள் நடத்திய துணிகர கொள்ளைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என்று நம்பப்படும் அந்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த இரண்டு இந்திய இளைஞர்கள் பிடிபட்டனர்.

கடந்த வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் அந்த பங்களாவீட்டின் உரிமையாளர் என்று நம்பப்படும் 37 வயது நபர் பாராங்கினால் வெட்டி காயப்படுத்தியது உட்பட வீட்டில் இருந்த ஒரு மாதுவையும், மற்றொரு நபரையும் கட்டிப்போட்டப்பின்னர் ரொக்கப் பணம், சாமி சிலைகள், நகைகள் உட்பட 6 லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

இரண்டு கார்களில் வந்திறங்கி, / பங்களா வீட்டின் வேலி சுவரில் ஏறிக்குதித்து, / பாராங் முனையில் 10,12 பேர் நடத்திய இந்த கொள்ளை தொடர்பில் தென் கிள்ளான் மாவட்ட போலீசார் மேற்கொண்ட துரித நடவடிக்கையில் இரண்டு இந்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

பெட்டாலிங் ஜெயா, Kota Damansara, Seksyen 6, Gugusan Cempaka Jalan Cecawi- யைச் சேர்ந்த 23 வயது இளைஞர் மற்றும் தஞ்சோங் மாலிம், Taman Malim 2, Jalan Malim- மை சேர்ந்த 38 வயது நபர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கொள்ளைச் சம்பவத்தில் மொத்தம் 10 பேர் ஈடுபட்டதை பிடிபட்ட இரண்டு கொள்ளையர்களும் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பங்களா வீட்டை நோக்கி போலீசார் விரைவதற்குள் கொள்ளையர்கள் இரண்டு கார்களில் தப்பிச் சென்று விட்டதாக நம்பப்படுகிறது.

எனினும் 23 வயதுடைய ஒரு கொள்ளையன் மட்டும் , காரில் ஏறுவதற்குள் போலீசார் வந்து விட்டதால் தப்பிக்க இயலாமல் அந்த பங்களா வீட்டின் அருகாமையில் உள்ள ஒரு கால்வாயில் விடியும் வரையில் பதுங்கியிருந்தாக நம்பப்படுகிறது.

எனினும் மோப்ப நாய்களை கொண்டு போலீசார் நடத்திய சோதனையில், அந்த கால்வாயில் பதுங்கியிருந்த லிங்கேஸ்வரன் முனியாண்டி என்று அடையாளம் கூறப்பட்ட 23 வயதுடைய கொள்ளையன் வளைத்துப் பிடிக்கப்பட்டான்.

அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளை நடந்த பங்களா வீட்டிற்கு அருகாமையில் உள்ள எண் இடப்படாத ஒரு வீட்டில் 38 வயதுடைய தமிழ்குமரன் பன்னீர் செல்வம் என்று அடையாளம் கூறப்பட்ட நபர் பிடிபட்டார்.

இந்த இருவரை கைது செய்தது மூலம் போலீசார் 29 அங்குள்ள நீளமுள்ள நீண்ட வெட்டுக்கத்தி , சாக்லெட் நிறத்திலான ஜேக்கெட்டுகள், கையுறைகள், முகமூடிகள் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த கொள்ளையில் ஈடுபட்டதாக நம்பப்படும் மேலும் எட்டு பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை தேடும் நடவடிக்கையில் போலீசார் முழு வீச்சில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

பிடிபட்டுள்ள கோத்தா டாமன்சாராவைச் சேர்ந்த 23 வயது நபருக்கு முந்தைய குற்றப்பதிவு எதுவும் இல்லை. பிடிபட்ட மற்றொரு நபரான தஞ்சோங் மாலிமைச் சேர்ந்த 38 வயதுடைய நபருக்கு மொத்தம் 14 குற்றப்பதிவுகள் உள்ளன.

பண்டார் பாரு கிள்ளான், காப்பார், புக்கிட் ராஜா, குவந்தான் உட்பட பல்வேறு பகுதிகளில் அந்த நபர் பாராங் முனையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது..

விசாரணைக்கு ஏதுவாக அந்த இரண்டு நபர்களையும் தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →