கோலாலம்பூர், அக்டோபர்.18-
மக்களுக்கான அரசாங்க உதவிகளில் இன ரீதியான கண்ணோட்டமோ அல்லது விவாதமோ வேண்டாம் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்க உதவிகளில் இனம் ரீதியான மூலாம் பூசப்படுவதும் அல்லது அதனை சர்ச்சையாக்குவதற்கு முயற்சிக்கும் தரப்பினரின் செயலை அரசாங்கம் ஒரு போதும் சகித்துக் கொள்ளாது என்று பிரதமர் நினைவுறுத்தினார்.
தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் அனைத்து கொள்கைகளும் ஒதுக்கீடுகளும், உதவித் திட்டங்களும் இன, மத அல்லது மாநில அளவிலான பின்னணியைப் பொருட்படுத்தாமல் மக்களின் தேவைகளின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட்டு வருவதாக பிரதமர் விளக்கினார்.
இனத்தின் அடிப்படையில் உதவி குறித்து சர்ச்சைகளைக் கொண்டு வர வேண்டாம். இனத்தைப் பொருட்படுத்தாமல் தகுதியுள்ள அனைவருக்கும் அரசாங்கம் உதவி வருகிறது. அதிலும் அவர்கள் மிகவும் ஏழைகளாக இருந்தால், அவர்கள் அரசாங்கத்தின் உதவிகளைப் பெறுவதற்கு தகுதியுள்ளவர்கள் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
மலேசியாவில் இன ரீதியான அரசியல் மேலோங்க நாம் தொடர்ந்து அனுமதித்தால், இந்த நாட்டை ஒரு முன்னேற்றகரமான பாதைக்குக் கொண்டுச் செல்வதில் நாம் தோல்வி அடைந்து விடுவோம் என்று பிரதமர் நினைவுறுத்தினார்.
நம்மை பலவீனப்படுத்தக்கூடிய இன ரீதியான கதைகள் வேண்டாம் என்று கோலாலம்பூரில் இன்று சனிக்கிழமை இலக்கவில் அமைச்சு ஏற்பாட்டில் நடைபெற்ற மாபெரும் தீபாவளி விருந்து உபரிப்பு நிகழ்வில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
பினாங்கு போன்ற சில மாநிலங்களில் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும்போது அரசாங்கம் பாரபட்சமாக இருப்பதாக ஒரு சில தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால், அங்கு மலாய்க்கார அல்லாதவர்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். அவர்களுக்கும் அரசாங்க உதவி சென்றடைய வேண்டும்.
கிளந்தானிலும் மலாய்க்காரர்கள் அதிகமாக உள்ளனர். அவர்களுக்கும் அதிகமானை உதவிகள் சென்றடைகின்றன. கோலாலம்பூரில் பத்து தொகுதியை உள்ளடக்கி செந்தூலில் அதிகமான இந்தியர்கள் உள்ளனர். அங்கு வறுமையில் உள்ளனர். அவர்களுக்கு அதிகமான உதவிகள் சென்றடைகின்றன. அதனை நாம் கேள்வி எழுப்ப முடியுமா? என்று டத்தோ ஶ்ரீ அன்வார் வினவினார்.
இந்த முறை இந்தியர்களுக்கு அரசாங்கத்தின் அதிகமான உதவிகள் சென்றடைந்து இருப்பதைச் சுட்டிக் காட்டிய பிரதமர், வறிய நிலையில் யார் இருந்தாலும் அவர்களின் பின்னணி பாராமல் அரசாங்கத்தின் உதவிகள் சென்றடையும் என்று உறுதி அளித்தார்.
இலக்கவில் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொழில்முனைவோர், கூட்டறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன், தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ டத்தோ ஆர். நடராஜா உட்பட முக்கிய பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.