சுபாங் ஜெயா, ஆகஸ்ட்.04-
அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பை ஏற்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், ரஷ்யாவுற்குப் பயணமானார்.
நாளை ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கி 10 ஆம் தேதி வரையிலான மாமன்னரின் அதிகாரத்துவ ரஷ்ய வருகையை முன்னிட்டு இன்று காலை 8.55 மணியளவில் சுபாங், அரச மலேசிய ஆகாயப்படைத் தளத்தில் சிறப்பு விமானம் மூலம் சுல்தான் இப்ராஹிம் மாஸ்கோ புறப்பட்டார்.
விமான நிலையத்தில் மாமன்னரை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபாடில்லா யுசோஃப் மற்றும் மூத்த அமைச்சர்கள் வழியனுப்பி வைத்தனர்.
1967 ஆம் ஆண்டு முதல் மலேசியா, ரஷ்யாவுடன் தூதரக தொடர்பு கொண்டுள்ளது. மலேசிய மாமன்னர் ஒருவர், ரஷ்யாவிற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
மாமன்னர் ரஷ்யாவிற்குப் புறப்படுவதற்கு முன்னதாக, அரச மலேசிய மலாய் இராணுவப் பட்டாளம் வழங்கிய மரியாதை வரவேற்பை ஏற்றுக் கொண்டார். 21 பீரங்கி குண்டுகள் முழக்கமிடப்பட்டதுடன் தேசியக் கீதம் பாடப்பட்டது.








