கோலாலம்பூர், டிசம்பர்.10-
கோலாலம்பூர் மாநகரில் ஓர் ஆடம்பர வீட்டில் ஆவணங்களைப் போலியாகத் தயாரிக்கும் கும்பல் ஒன்றை மலேசிய குடிநுழைவுத்துறை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறப்பு சோதனை நடவடிக்கையில் 6 வங்காளதேசப் பிரஜைகள் கைது செய்யப்பட்டது மூலம் பயண ஆவணங்களைப் போலியாகத் தயாரித்த இந்தக் கும்பல் முறியடிக்கப்பட்டதாக மலேசிய குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்தார்.
மதியம் 12.35 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில் மூளையாக இருந்து செயல்பட்ட ஒரு வங்காளதேசப் பிரிஜையான ரைஹான் என்பவர் பிடிபட்டுள்ளதாக டத்தோ ஸாகாரியா குறிப்பிட்டார்.
குடிநுழைவுத்துறையின் புத்ராஜெயா உளவுப்பிரிவு கடந்த இரண்டு வாரங்களாக மேற்கொண்ட உளவு நடவடிக்கையின் பலனாக கோலாலம்பூர் ஜாலான் செமோரிலும், ஜாலான் ஈப்போவிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.








