கோலாலம்பூர், ஆகஸ்ட்.11-
எஸ்டிஆர் எனப்படும் சும்பாங்கான் தூனாய் ரஹ்மா திட்டத்தின் மூன்றாம் கட்ட ரொக்கப் பண உதவி, நாளை ஆகஸ்ட் 12 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, எஸ்டிஆர் பெறுநர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
86 லட்சம் மக்களுக்கு வழங்கப்படும் இந்த எஸ்டிஆர் நிதி உதவிக்காக அரசாங்கம் மொத்தம் 200 கோடி ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் வழங்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான முதல் கட்ட எஸ்டிஆர் நிதியில் பெறுநர்களின் எண்ணிக்கை மேலும் 3 லட்சமாக அதிகரிக்கப்பட்டு, பெறுநர்களின் மொத்த எண்ணிக்கை 83 லட்சத்திலிருந்து 86 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நிதி உதவி கிடைக்காதவர்கள் செய்து கொண்ட மேல்முறையீட்டின் அடிப்படையில் தகுதி பெறுகின்றவர்களின் நிலை ஆராயப்பட்டு, எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளதாக அது அறிவித்துள்ளது.








