கோலாலம்பூரில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பல ஆண்டு கால வர்த்தக உரிமப் புதுப்பிப்பு நடைமுறையின் காரணமாக, கடந்த இரண்டு மாதங்களில், மொத்தம் 8,000 வர்த்தக நிறுவனங்கள் தங்களது வர்த்தக உரிமங்களைப் புதுப்பித்துள்ளதாக பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார்.
அவற்றில் 704 நிறுவனங்கள் 2 ஆண்டுகளுக்கும், 1,802 நிறுவனங்கள் 3 ஆண்டுகளுக்கும் உரிமங்களைப் புதுப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ஹன்னா இயோ மேலும் கூறுகையில், 2 ஆண்டுகளுக்கு உரிமம் புதுப்பிப்போருக்கு 5 விழுக்காடு தள்ளுபடியும், 3 ஆண்டுகளுக்கு புதுப்பிப்போருக்கு 10 விழுக்காடு தள்ளுபடியும் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்கத்துடனான வர்த்தக நடவடிக்கைகளை எளிதாக்கவும், தேவையற்ற நிர்வாக நடைமுறைகளால் வணிகர்களின் நேரம் வீணாவதைத் தவிர்க்கவும் இந்த முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் நேற்று இரவு நடைபெற்ற கேஎல்எஸ்சிசிசிஐ எனப்படும் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன வர்த்தக மற்றும் தொழில் சங்கத்தின் 122-ஆவது ஆண்டு விழா இரவு விருந்தில் ஹன்னா இயோ இதனைத் தெரிவித்துள்ளார்.








