செனாவாங், நவம்பர்.04-
கடந்த மாதம் செனாவாங்கிலுள்ள பள்ளி ஒன்றின் கழிப்பறையில் சுயநினைவின்றி கிடந்த 10 வயது மாணவர் மரணமடைந்த சம்பவத்தில், நீதி கேட்டு அவரது குடும்பத்தினர் முறையிட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் நடந்து 1 மாதத்திற்கு மேலாகியும், இதுவரை பிரேதப் பரிசோதனை அறிக்கையைத் தவிர வேறு எந்தத் தகவலையும் பெற்றோர் பெறவில்லை என்று அவர்களது குடும்ப வழக்கறிஞர் முகமட் யாஸிட் முகமட் சலிம் தெரிவித்துள்ளார்.
கழுத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக அம்மாணவர் இறந்துள்ளது பிரேதப் பரிசோதனையில் உறுதியாகியுள்ள நிலையில், இறப்பிற்கான உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக அப்பள்ளியைச் சேர்ந்த 49 சாட்சிகளிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக இவ்வழக்கு மரண விசாரணை நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட வேண்டும் என்றும் முகமட் யாஸிட் வலியுறுத்தியுள்ளார்.








