மலாக்கா, ஜூலை.22-
நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி, கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 7 வயது சிறுவன், சிகிச்சை பயன் அளிக்காமல் உயிரிழந்தான்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் மலாக்கா, கோத்தா லக்சாமானா, தாமான் கோத்தா ஷாபண்டாரில் உள்ள ஒரு கொண்டோமினியம் வீடமைப்புப் பகுதியில் உள்ள நீச்சல் குளத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் ஜோகூர், ரிந்திங் 3 தேசியத் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த அந்த மாணவன், மூச்சுத் திணறலுக்கு ஆளாகி கடந்த இரண்டு தினங்களாக மலாக்கா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தான்.
எனினும் சிகிச்சைப் பயன் அளிக்காமல் அவன் இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததாக மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ங்வே ஹீ செம் தெரிவித்தார்.








