ஜோகூர் மாநிலம், யோங் பெங் பகுதியில் உள்ள இடைநிலைப் பள்ளியில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட 16 வயது மாணவி ஐரின் சோஃபியா முஹமட் கைருல் ஃபைசாலின் தந்தை, தனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிச்சடங்கு நிகழ்வின் போது, செய்தியாளர்களிடம் பேசிய முஹமட் கைருல் ஃபைசால் கியார், தனது மகளுக்காக நீதி நிலைநாட்ட அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
மேலும், ஐரின் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் ஆதாரமற்ற ஊகங்களைப் பரப்பி, அவரது கண்ணியத்தைப் பாதிக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, யோங் பெங், பத்து பஹாட்டில் உள்ள பாரிட் அர்ஷாட் முஸ்லிம் மயானத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பத்து பஹாட்டில் உள்ள சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனையில், ஐரினின் உடற்கூறாய்வு மாலை சுமார் 6 மணியளவில் நிறைவடைந்தது.
பின்னர் அவரது உடல் கம்போங் பாரிட் செலாமாட்டில் உள்ள தாத்தா-பாட்டி வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், இது குறித்து ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அப் ரஹமான் அர்சாட் கூறுகையில், ஐரினின் தலை மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் பல காயங்கள் காணப்பட்டதாகவும், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு வரும் அக்டோபர் 9-ஆம் தேதி வரை ஆறு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவமானது குற்றவியல் சட்டம், 302-ஆவது பிரிவின் கீழ் கொலை வழக்காக விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.








