கோலாலம்பூர், நவம்பர்.12-
நாட்டில் ஊடகங்களின் சுதந்திரத்தில் மடானி அரசாங்கம் தலையிட்டது இல்லை என்று தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் இன்று மக்களவையில் தெரிவித்தார்.
நாட்டின் ஜனநாயக முறையில் இருக்கக்கூடிய முக்கியத் தூண்களில் ஒன்று, ஊடகங்களின் சுதந்திரமாகும் என்று தியோ குறிப்பிட்டார்.
இருப்பினும், ஊடகங்களின் இந்த சுதந்திரம் பொறுப்புடன் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் தொழில்முறை ரீதியாக பத்திரிகை நெறிமுறைகளின் அடிப்படையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் துணை அமைச்சர் வலியுறுத்தினார்.
தலைவர்களையும் அரசாங்கத்தையும் இழிவுபடுத்தும் ஊடகங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற குற்றச்சாட்டுகளிலிருந்து அதன் தோற்றத்தைப் பாதுகாக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மக்களவையில் பாரிசான் நேஷனல் சிம்பாங் ரெங்காம் எம்.பி. டத்தோ ஶ்ரீ ஹஸ்னி முகமட் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் துணை அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதிச் செய்வதில் மட்டுமல்லாமல், உண்மையான, சமநிலையான மற்றும் மக்களைத் தவறாக வழிநடத்தாத தகவல்களை வழங்குவதிலும் ஊடகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று தியோ குறிப்பிட்டார்.
ஊடகச் சுதந்திரத்தை அரசாங்கம் ஒரு போதும் மறுத்தது கிடையாது. ஆனால் இந்தச் சுதந்திரம் பொறுப்புடன் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக தியோ வலியுறுத்தினார்.
ஊடகங்களின் நெறிமுறை மற்றும் தொழில்முறை தரங்களை உறுதிச் செய்வதற்காக மஜ்லிஸ் மெடியா மலேசியா எனும் 2025 ஆம் ஆண்டு மலேசிய ஊடக மன்றச் சட்டம் இயற்றப்பட்டு இருப்பதையும் துணை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.








