Dec 4, 2025
Thisaigal NewsYouTube
சிறுமியைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக 4 நபர்கள் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

சிறுமியைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக 4 நபர்கள் மீது குற்றச்சாட்டு

Share:

சிரம்பான், ஆகஸ்ட்.29-

வீடொன்றில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக நான்கு நபர்கள், சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

ஒரு மெக்கானிக்கான 21 வயது Y. Sayrran, ஒரு லோரி ஓட்டுநரான 30 வயது தினேஸ்வரன், ஒரு மெக்கானிக்கான 21 வயது G. நிரேஸ் பிள்ளை மற்றும் போக்குவரத்துச் சேவை நிறுவனத்தின் உரிமையாளரான 40 வயது K. குமார் என்ற அந்த நான்கு நபர்களும் நீதிபதி டத்தின் சுரிதா புடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி நெகிரி செம்பிலான், ஜெம்போல், பாஹாவ், தாமான் மெராந்தியில் உள்ள ஒரு வீட்டின் அறையில் 11 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அந்த நால்வரும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

இந்த நால்வரில் 21 வயது Y. Sayrran, அதே வீட்டில் 12 வயதுடைய மற்றொரு சிறுமியைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக மற்றொரு குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 376 ஆவது பிரிவின் கீழ் நால்வரும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

நால்வரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.

இந்த நால்வரின் Y. Sayrran- னுக்கு 30 ஆயிரம் ரிங்கிட் ஜாமீன் அனுமதிக்கப்பட்ட வேளையில், குமார் மற்றும் தினேஸ்வரனுக்கு தலா 10 ஆயிரம் ரிங்கிட்டும், நிரேஸ் பிள்ளைக்கு 5 ஆயிரம் ரிங்கிட்டும் ஜாமீன் தொகையாக அனுமதிக்கப்பட்டது.

Related News