Jul 6, 2026
Thisaigal NewsYouTube
உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்: சட்டச் சிக்கலைத் தவிர்க்க ஆலயங்களைப் பதிவு செய்ய டத்தோ சிவநேசன் வலியுறுத்தல்
தற்போதைய செய்திகள்

உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்: சட்டச் சிக்கலைத் தவிர்க்க ஆலயங்களைப் பதிவு செய்ய டத்தோ சிவநேசன் வலியுறுத்தல்

Share:

பேரா மாநிலத்தின் பிரசித்தி பெற்ற, 75 ஆண்டுகள் பழமையான உலு கிந்தா தஞ்சோங் ரம்புத்தான் குருவிமலை அருள்மிகு ஸ்ரீ கணேசர் ஆலயத்தின் 3-ஆவது மகா கும்பாபிஷேகம் இன்று திரளான பக்தர்கள் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது.

சுமார் 3 லட்சம் ரிங்கிட் செலவில் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்ட இந்த ஆலய விழாவில், பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன், சட்டமன்ற உறுப்பினர் முகமட் அரப்பாட் மற்றும் தாம்பூன் நாடாளுமன்றத் தொகுதி சிறப்பு அதிகாரி டத்தோ ஆர். சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

விழாவிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ சிவநேசன், பேரா மாநிலத்தில் அரசு நிலங்களில் உள்ள எந்தவொரு ஆலயமும் உடைக்கப்படாது என்றும், அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால் மாற்று இடங்கள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். எனினும், ஏற்கனவே மாற்று நிலம் வழங்கப்பட்டும் சிலர் செல்ல மறுப்பதாகவும், இதனால் ஆலயம் உடைக்கப்பட்டால் அதற்குத் தாம் பொறுப்பேற்க முடியாது என்றும் நினைவுறுத்தினார்.

மேலும், எதிர்காலச் சட்டச் சிக்கல்களைத் தவிர்க்க ஆலயங்களை முறைப்படி அரசாங்கப் பதிவேட்டில் பதிய வேண்டும் என வலியுறுத்திய அவர், குருவிமலை ஆலயம் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். அத்துடன், உலு கிந்தா ஏழு கன்னிகள் காளியம்மன் ஆலய நில விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்விழாவில் ஆலயத்திற்கு வழங்கப்பட்ட நிதியுதவிகள் குறித்துப் பேசிய ஆலயத் தலைவர் க. தர்மலிங்கம், டத்தோ சிவநேசன் அரசு மானியமாக 40 ஆயிரம் ரிங்கிட்டும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 30 ஆயிரம் ரிங்கிட்டும், சட்டமன்ற உறுப்பினர் முகமட் அரப்பாட் 10 ஆயிரம் ரிங்கிட்டும், பொதுநலத் தொண்டர் டத்தோஸ்ரீ க. இருதயநாதன் 50 ஆயிரம் ரிங்கிட்டும் வழங்கியுள்ளதாகத் தெரிவித்து நன்றி கூறினார்.

Related News