ஜகார்த்தாவில் 26 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளைக் கடத்தியதாகக் கூறப்படும் மலேசிய விமானி, ஆரம்ப 60 நாள் தடுப்புக் காவல் முடிவடைந்த நிலையில், மேலும் 30 நாட்களுக்கு இந்தோனேசிய நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்ததாக ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இந்த 30 நாள் காவல் காலத்துக்குப் பின்னரும், தேவைப்பட்டால் மேலும் 30 நாட்களுக்கு காவலை நீட்டிக்க முடியும் என்று அவர் கூறினார்.
இதனிடையே, இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட மற்றொரு விமானி உட்பட மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் ஆறு பேரும் 1985ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் தொடர்பான சிறப்பு தடுப்பு நடவடிக்கைச் சட்டத்தின் கீழ் 60 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஹுசேன் தெரிவித்தார்.








