ஷா ஆலாம், ஆகஸ்ட்.01-
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, மலேசிய கடல்சார் அமலாக்க ஏஜென்சியின் தடுப்புக் காவலில் இருந்த போது, தூக்கில் தொங்கி மரணம் அடைந்ததாகக் கூறப்பட்ட முன்னாள் பாதுகாவலர் ஒருவரின் குடும்பத்திற்கு ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 170 ரிங்கிட்டை இழப்பீடாக வழங்கும்படி ஷா ஆலம் உயர் நீதிமன்றம், அரசாங்கத்திற்கு இன்று உத்தரவிட்டது.
31 வயது எம். தினகரன் என்ற அந்த முன்னாள் பாதுகாவலர், தான் தடுத்து வைக்கப்பட்டு இருந்த அறையில், காற்சட்டையைக் கயிறாகத் திரித்து, தூக்கில் தொங்கியதாகக் கூறப்பட்டது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பிடிபட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருந்த தினகரன் மரணத்திற்குச் சம்பந்தப்பட்ட அமலாக்கத் தரப்பினரின் கவனக்குறைவே காரணமாகும் என்று நீதிபதி அலிஸ் லோக் யீ சிங் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
பொதுச் சேவை அதிகாரிகள் என்ற முறையில் தங்களுக்கு வழங்கப்பட்ட கடமையிலிருந்து தவறியதன் காரணமாகவே தனது மகன் தினகரனுக்கு இத்தகைய மரணம் நேர்ந்தது என்று கூறி, தாயார் ஆர். தனேஸ்வரியும், தந்தை கே. மகாதேவனும், அரசாங்கம், கடல் சார் அமலாக்க ஏஜென்சி, அதன் இயக்குநர் ஆகிய மூன்று தரப்பினருக்கு எதிராக இழப்பீடு கோரி இந்த சிவில் வழக்கைத் தொடுத்து இருந்தனர்.
காவல் அறையில் தடுப்புக் கைதிகள், தற்கொலை செய்து கொள்வதற்கான இடர் அதிகமாக இருக்கிறது என்று நன்கு தெரிந்திருந்தும், சம்பந்தப்பட்ட கைதிக்குக் கூடுதலாக ஒரு காற்சட்டையை வழங்கியது மூலம் அமலாக்கத் தரப்பினரின் விதி மீறல்கள் நடந்துள்ளன. இதற்கு மூன்று தரப்பினருமே தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என்று நீதிபதி அலிஸ் லோக் யீ சிங் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.








