கோலாலம்பூர், ஜூலை.13-
செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்திற்கு "ஏஐ- ஆல் உருவாக்கப்பட்டது" என்று கட்டாயமாக முத்திரைக் குத்துவதை, இந்த ஆண்டு இறுதியில் அமலுக்கு வரவுள்ள இணையப் பாதுகாப்புச் சட்டம் 2024 இன் கீழ் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. ஏஐ தவறாகப் பயன்படுத்துவது, குறிப்பாக சமூக ஊடகங்களில் மோசடி, அவதூறு பரப்புதல், அடையாளம் திருடுதல் போன்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு இது முக்கியம் என தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
சில சமூக ஊடகத் தளங்கள் ஏற்கனவே தானாகவே ஏஐ உள்ளடக்கத்திற்கு லேபலிங் செய்யத் தொடங்கியுள்ளன. மேலும் இந்த முயற்சி ஆசியான் நாடுகளிடையே விரிவுபடுத்தப்படலாம். ஏஐ உருவாக்கிய போலி வீடியோக்களும் படங்களும் பரவுவது குறித்த கவலைகள் உள்ள நிலையில், உலக அளவில் இன்னும் திருப்திகரமான ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள் இல்லை என்றும், ஐக்கிய நாடுகள் சபை, அனைத்துலகத் தொலைத் தொடர்புச் சங்கம் போன்ற அமைப்புகளால் இது குறித்து தீவிர விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.








