கோலாலம்பூர், நவம்பர்.28-
எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுடன் சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி குறித்து விசாரணை செய்யுமாறு, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரானது, எஸ்பிஆர்எம்மைச் சேர்ந்த அதிகாரி ஒருவரால் புத்ராஜெயா போலீஸ் தலைமையகத்தில் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்காணொளியில், தனிநபர் ஒருவர் அஸாம் பாக்கியைச் சந்தித்து, வர்த்தகர் ஆல்பெர்ட் தேயை வழக்கு ஒன்றிலிருந்து விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
பெண் ஒருவரும், வர்த்தகர் ஆல்பெர்ட் தேயும் உரையாடுவது போலான அக்காணொளியில் இடம் பெற்றுள்ள குற்றச்சாட்டுகள், அஸாம் பாக்கியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக அந்த எஸ்பிஆர்எம் அதிகாரி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், எஸ்பிஆர்எம்மின் விசாரணைகள் எப்போதும், யாருடைய தலையீடும் இன்றி, முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட்டு வருவதாக அந்த அதிகாரி தனது புகாரில் வலியுறுத்தியுள்ளார்.








