ஜோகூர் பாரு, ஜனவரி,10-
சிங்கப்பூரின் இரண்டு முக்கியத் தரைமார்க்கச் சோதனைச் சாவடிகளில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஜோகூர் பாருவில் உள்ள சுல்தான் ஈச்கண்டர் கட்டடம் மற்றும் சிங்கப்பூர் வுட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிகளில் இன்று சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் பரிதவிப்புக்கு ஆளாகினர்.
இன்று அதிகாலை முதல் சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையமான ICA கணினி அமைப்பில் ஏற்பட்ட பெரிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தானியங்கி குடிநுழைவு வாயில்களான ஆட்டோகேட்கள் முற்றிலும் செயலிழந்தன. இதன் எதிரொலியாக, ஜோகூர் பாரு சுல்தான் ஈச்கண்டர் கட்டட வளாகத்தில் உள்ள குடிநுழைவுச் சோதனைகளும் ஸ்தம்பித்தன.
வார இறுதி நாள் என்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை நிமித்தமாகவும், சுற்றுலாவுக்காகவும் சிங்கப்பூர் நோக்கிச் செல்லக் காத்திருந்தனர். ஆட்டோகேட்கள் செயல்படாததால், பயணிகள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது. குறிப்பாக, வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் வெளிநாட்டினர் காற்றோட்டம் குறைந்த பகுதிகளில் கடும் நெரிசலில் சிக்கிப் பெரும் பரிதவிப்புக்கு ஆளாகினர்.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர, குடிநுழைவுத் துறை அதிகாரிகள் கூடுதல் மனிதவளத்தை ஈடுபடுத்தி, கையால் சரிபார்க்கும் முகப்பிட முறையைத் தீவிரப்படுத்தினர். இருப்பினும், பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் நெரிசலைக் குறைக்கப் பல மணி நேரம் ஆனது.
தொழில்நுட்பக் கோளாறைச் சரி செய்யும் பணிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியத் தரப்பில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பயணிகள் தங்களின் பயணத்தைத் திட்டமிடும் முன் தற்போதைய நிலையைச் சமூக வலைதளங்கள் மூலம் சரி பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








