சுங்கை பட்டாணி, நவம்பர்.13-
வாடிக்கையாளரைப் போல் பாவனை செய்து நகைக்கடைக்குள் நுழைந்த ஆடவர் ஒருவர் சுமார் 20 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்பைக் கொண்ட தங்க நகைகளுடன் ஓட்டம் பிடித்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் சுங்கை பட்டாணி, திக்காம் பத்துவில் உள்ள ஒரு நகைக்கடையில் நிகழ்ந்தது.
சம்பவம் நிகழும் போது நகைக்கடையில் ஐந்து வாடிக்கையாளர்கள் இருந்தனர். கடை பணியாளர்கள் அனைவரும் வாடிக்கையாளர்களைக் கவனிப்பதில் தீவிரமாக இருந்த போது, அந்த ஆடவர் இந்த கைங்கரியத்தைப் புரிந்துள்ளார் என்று பெயர் குறிப்பிட விரும்பாத நகைக்கடை உரிமையாளர் தெரிவித்தார்.
நகைகளை வாங்குவது போல் பாவனை செய்து, அவற்றைக் கையில் எடுத்து அழகுப் பார்த்துக் கொண்டு இருந்த நபர், அடுத்த நிமிடமே மின்னல் வேகத்தில் அங்கிருந்து ஓட்டம் எடுப்பார் என்று பணியாளர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை என்று அவர் கூறினார்.
இந்தச் சம்பவத்தில் 40.98 கிராம் எடை கொண்ட கைச்சங்கிலி பறி போனதாக அந்த நகைக்கடை உரிமையாளர் போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளார்.








