நீலாய், டிசம்பர்.27-
கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி நீலாய், டேசா பால்மா அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த வெடிச் சம்பவம் தொடர்பாக, நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்ததாக நம்பப்படும் 62 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாகக் கருதப்படும் Yeoh Hock Sun என்ற 62 வயதுடைய நபர் "மிகவும் ஆபத்தானவர்" என போலீசார் வகைப்படுத்தியுள்ளனர்.
கடந்த நான்கு நாட்களாக தீவிரமாகத் தேடப்பட்டு வந்த அந்த நபர், இன்று மாலையில் சிரம்பான் அருகில் மந்தினில் கைது செய்யப்பட்டதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் துணை கமிஷனர் டத்தோ அல்ஸாஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.
சந்தேக நபர் தங்கியிருந்த வீட்டைச் சோதனையிட்டதில், சுமார் 31 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் அவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கந்தகம், கார்பன் போன்ற மூலப் பொருட்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்து அழித்துள்ளனர் என்று டத்தோ அல்ஸாஃப்னி குறிப்பிட்டார்.








