கோலாலம்பூர், ஜனவரி.21-
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசாங்கம் இலவசக் கல்வி வழங்கும் என்று அறிவித்ததற்காக, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஆட்டிசம் சிறுவன் ஒருவன் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளான்.
முகநூலில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில், ராஜேந்திர வர்மா என்ற அந்தச் சிறுவன், இந்த அறிவிப்பு அனைத்து மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கும் ஒரு "நம்பிக்கைப் பரிசு" என்று குறிப்பிட்டுள்ளான்.
"எங்கள் எதிர்காலம் முக்கியமானது என்பதையும், சவால்கள் எதுவாக இருந்தாலும் மலேசியாவின் முன்னேற்றப் பயணத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் இடம் உண்டு என்பதையும் இது காட்டுகிறது" என்று செந்துல் உத்தாமா தேசியப் பள்ளியின் ஒருங்கிணைந்த சிறப்பு கல்வித் திட்டத்தில் பயிலும் அந்த மாணவன் கூறினான்.
மேலும் அவன் கூறுகையில், "பெற்றோர்களே, உங்களுக்கு நன்றி. நீங்கள்தான் எங்களின் மிகப் பெரிய ஆதரவு. ஆசிரியர்களே, எங்களை அர்ப்பணிப்புடன் வழிநடத்துவதற்கு நன்றி. பிரதமர் அவர்களே, எங்களை நம்பியதற்கு மிக்க நன்றி," என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தான்.
சிறப்புக் கல்விப் பிரிவில் அதிக எண்ணிக்கையிலான ஓவியக் கண்காட்சிகளை நடத்தியதற்காக ' மலேசிய சாதனைப் புத்தகத்தில் ' இடம் பெற்றுள்ள ராஜேந்திர வர்மா, சக மாணவர்களிடம் கற்றலை ஒரு போதும் கைவிடாதீர்கள் என்றும் தங்களை எப்போதும் நம்புங்கள் என்றும் ஊக்கப்படுத்தியுள்ளான்.








