கோலாலம்பூர், ஜூலை.31-
இந்தியச் சமூகத்தின் சமூகவியல் உருமாற்றுத் திட்டமான மித்ராவின் கீழ் அங்கீகரிக்கப்படும் அனைத்தும், வெளிப்படையாகவும், அதிகமாகப் பயன் தரும் வகையிலும் இருப்பதை உறுதிச் செய்ய ஒவ்வோர் ஒதுக்கீட்டையும் பிரதமர் துறை அலுவலகம் மிகக் கவனமாக ஆய்வு செய்து, மதிப்பீடு செய்வதாக தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறைத் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.
சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு விண்ணப்பமும் மித்ரா வழியாக மட்டுமல்லாமல், பிரதமர் துறையின் கீழ் உள்ள கண்காணிப்பு, நிதி மற்றும் நன்னெறி ஆகிய பிரிவுகளை உள்ளடக்கிய தரப்பினரால் விரிவாக ஆராயப்படுகிறது என்று டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.
மித்ரா திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள அனைத்து திட்டமிடல்களையும், அவற்றின் முன்னேற்றங்களையும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரடியாகக் கண்காணித்து வருகிறார் என்பதையும் டத்தோ ஶ்ரீ ரமணன் தெளிவுபடுத்தினார்.
வழங்கப்படும் சேவைகள், உண்மையிலேயே வெளிப்படையாகவும் அதே வேளையில் இந்திய சமூகத்தில், குறிப்பாக B40 தரப்பினரின் எதிர்பார்ப்புகளை நிறைவுச் செய்வதை உறுதிச் செய்ய பிரதமர் விரும்புகிறார் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.
பிரதமர் அலுவலகத்தால் அங்கீகரிக்கப்படக்கூடிய ஒவ்வொரு முடிவும், உண்மை நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.
மித்ரா உட்பட பல்வேறு அமைச்சுகள் மற்றும் அவை தொடர்புடைய நிறுவனங்களின் உள்ளீடுகளினால் மிகக் கவனமாக ஆராயப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்ட செயல்முறையின் விளைவாகும் என்று இந்தியர்களின் விவகாரங்களுக்கு பொறுப்பேற்று இருப்பவருமான டத்தோ ஶ்ரீ ரமணன் விளக்கினார்.
இந்தியச் சமூகத்திற்கு உதவுவதற்காக ஒதுக்கப்படும் அரசு நிதி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் திட்டங்களுக்கு உண்மையிலேயே பயன்படுத்தப்படுவதை பிரதமர் உறுதிச் செய்ய விரும்புகிறார்.
மற்ற அரசு நிறுவனங்களின் தலையீடுகளும், எந்தத் தொடர்பும் இருப்பதை பிரதமர் விரும்பவில்லை என்பதை டத்தோ ஶ்ரீ ரமணன் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையின் வழி விளக்கினார்.








