இஸ்கண்டார் புத்ரி, டிசம்பர்.29-
சிங்கப்பூரை நோக்கிச் செல்லும் மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது பாலமான Linkedua – விலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை கடலில் விழுந்ததாக அஞ்சப்படும் ஓர் ஆடவரைத் தேடும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நேற்று மதியம் சுமார் 1:11 மணியளவில் இச்சம்பவம் குறித்த தகவல் போலீசாருக்கும் தீயணைப்புத் துறைக்கும் கிடைத்தது. பாலத்தின் 14-வது கிலோமீட்டர் தூரத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்ததைப் பொதுமக்கள் கண்டுள்ளனர்.
இஸ்கண்டார் புத்ரி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் படகுகள் மற்றும் சிறப்பு உபகரணங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கடலில் விழுந்து மாயமானவர், 30 வயது மதிக்கத்தக்க உள்ளூர் ஆடவர் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று மாலை வரை நீடித்த தேடுதல் பணி, போதிய வெளிச்சமின்மை மற்றும் மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இன்று திங்கட்கிழமை காலையில் இருந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணி மீண்டும் தொடங்கியது.








