கோலாலம்பூர், ஆகஸ்ட்.08-
அரிய வகை ஆமைக் குட்டிகளைக் கடத்த முயற்சித்த இந்தியப் பிரஜை ஒருவர், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் கைது செய்யப்பட்டார்.
மலேசியாவில் ஓர் உணவகத்தில் சமையல்காரராக வேலை செய்து வந்த 41 வயதுடைய அந்த இந்திப் பிரஜை, கடந்த செவ்வாய்க்கிழமை, கோலாலம்பூரிலிருந்து இந்தியா, பெங்களூருவுக்குப் புறப்படுவதற்குத் தனது பயணப் பெட்டிகளைச் சோதனைக்கு அனுப்பிய போது, இரண்டு பெட்டிகளில் ஒன்றில் 2,500 அரிய வகை ஆமைக் குட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கேஎல்ஐஏவில் உள்ள மலேசிய எல்லைக் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு அமலாக்கத் தரப்பினர் அந்த இந்தியப் பிரஜையைக் கைது சோதனை செய்த போது, அப்பெட்டி, பெங்களூருவில் ஒப்படைக்கும்படி தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், பெட்டிக்குள் ஆமைக் குட்டிகள் இருப்பது தமக்குத் தெரியாது என்றும் அவர் காரணம் கூறியுள்ளார் என்று அமலாக்க ஏஜென்சியின் கேஎல்ஐஏ கமாண்டர் இப்ராஹிம் முகமட் யூசோஃப் தெரிவித்தார்.
ஆமைகளைக் கடத்துவதற்கு சம்பந்தப்பட்ட நபர் கைக்கூலியாகப் பயன்படுத்துப்பட்டுள்ளார் என்றும் அந்நபரின் பயண டிக்கெட் மற்றும் பயணப் பெட்டி அனைத்தும் மலேசியாவில் உள்ள கடத்தல்காரர்களால் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
பெட்டிக்குள் ஆமைக் குட்டிகள் இருப்பது அந்த நபருக்கு நன்கு தெரியும் என்று நம்பப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள அந்த இந்தியப் பிரஜை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள வேளையில் அவரிடமிருந்து 3 லட்சத்து 48 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள ஆமைக் குட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.








