ரொம்பின், டிசம்பர்.27-
பகாங், தாமான் நெகிரி எண்டாவ்-ரொம்பின் பூங்காவில் வெள்ளத்தில் சிக்கிக் பரிதவித்த இத்தாலியத் தம்பதியர் இன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
43 வயது கணவன் மற்றும் 42 வயது மனைவி கடந்த டிசம்பர் 25-ஆம் தேதி இந்தப் பூங்காவிற்குச் சுற்றுப்பயணம் வந்தனர். அவர்கள் இன்று வெளியேறத் திட்டமிட்டிருந்த நிலையில், காலையில் பெய்த கனமழையினால் ஜாலான் தாமான் நெகிரி எண்டாவ் ரொம்பின் சாலை வெள்ளத்தில் மூழ்கியது. சுமார் 800 மீட்டர் நீளமுள்ள சாலை 2 மீட்டர் ஆழத்திற்கு நீரில் மூழ்கியதால் அவர்கள் அங்கேயே சிக்கிக் கொண்டனர்.
அவர்களை அழைத்துச் செல்ல வந்த சுற்றுலா முகவர் வெள்ளம் காரணமாகச் செல்ல முடியாமல் போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். இன்று மதியம் 1.00 மணியளவில், இரண்டு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழுவினர் படகு மூலம் பூங்காவிற்குச் சென்று, சுமார் 20 நிமிட போராட்டத்திற்குப் பிறகு அத்தம்பதியினரை மீட்டனர்.
பின்னர் அவர்கள் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக ரொம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் ஷாரிஃப் ஷாய் ஷாரிஃப் மொண்டோய் தெரிவித்தார்.








