புத்ராஜெயா, ஆகஸ்ட்.27-
வங்கி ஒன்றுக்குச் சொந்தமான அறவாரியத்தின் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரி ஒருவரையும், அரசு சாரா இயக்கம் ஒன்றின் தலைவரையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.
இருவரும் கூட்டாகச் சேர்ந்து, பொய்யான ஆவணங்களைச் சமர்ப்பித்து 21 லட்சம் ரிங்கிட்டைக் கோரியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அந்த இரு நபர்களும், இன்று காலையில் புத்ராஜெயா, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தடுப்புக் காவல் அனுமதி பெறப்பட்டது.
30 மற்றும் 50 வயதுடைய அவ்விருவரையும் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று மாலை 5.30 மணிக்கும் இரவு 11.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்ட அவ்விரு நபர்களும் விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.








