ஜார்ஜ்டவுன், அக்டோபர்.10-
ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் கொள்ளையிட்டதாக நபர் ஒருவர், ஜார்ஜ்டவுன், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார். பழைய இரும்புப் பொருட்களைச் சேகரிப்பவரான 43 வயது என். கண்ணன் என்ற அந்த நபர், நீதிபதி ஜுரைடா அப்பாஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி காலை 6.15 மணியளவில் ஜார்ஜ்டவுன், லோரோங் அபூ சிட் என்ற இடத்தில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண்மணியான 26 வயது Sheyla Rodriguez Navarro என்பவரை மடக்கி, கொள்ளையிட்டதாக கண்ணன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இச்சம்பவத்தில் தனது அனைத்துலக கடப்பிதழ், 200 euro ரொக்கத் தொகை ஆகியவற்றை இழந்ததாக அந்தப் பெண் போலீசில் புகார் செய்திருந்தார்.
எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை கண்ணன் ஒப்புக் கொண்டார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








