கோலாலம்பூர், ஜனவரி.17-
தமக்குச் சொந்தமாக ஆறு வாடகை வீடுகள் இருப்பதாகக் கூறிக் கொண்ட ஒரு நபரின் எஸ்டிஆர் 'ரஹ்மா ரொக்க உதவி' மற்றும் சாரா 'அடிப்படை ரஹ்மா உதவி' பெறுவதற்கான தகுதியை நிதி அமைச்சு ரத்து செய்துள்ளது.
வாடகை வருமானத்தை முறையாகத் தெரிவிக்காதது தொடர்பாக, 1967-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழ் அந்த நபர் தற்போது விசாரிக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அந்த நபர், 6 சொத்துக்களுக்கு உரிமையாளர் எனக் கூறப்பட்ட தகவல் உண்மையானது என்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு வருமான வாரியத்தின் முத்திரை வரி அல்லது e-Duti Setem முறையிலுள்ள தரவுகளின்படி, அந்தச் சொத்துகள் அந்த நபர் மற்றும் அவரது மனைவியின் பெயரில் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, அவருக்கு வழங்கப்பட்ட எஸ்டிஆர் மற்றும் சாரா நிதியுதவிச் சலுகைகள் மீட்டுக் கொள்ளப்பட்டு விட்டதாக நிதி அமைச்சு கூறியது.
முன்னதாக, கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் ஆறு வாடகை வீடுகளைச் சொந்தமாக வைத்திருக்கும் அந்த நபர், தமக்கு ஆண்டுதோறும் 1,900 ரிங்கிட் அரசாங்க நிதியுதவி கிடைப்பதாக சமூக வலைதளத்தில் பெருமையாக மார்தட்டிக் கொண்ட வீடியோ காட்டுத் தீயாய் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
வசதி படைத்த ஒருவரே ஏழைகளுக்கான நிதியுதவியைப் பெறுவதைக் கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள், அவருக்கு எதிராகக் கடும் கண்டனங்களைப் பதிவுச் செய்தனர். இறுதியில் அந்த வீடியோவே அவருக்கு வினையாக முடிந்து, அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கைக்கு வழிவகுத்தது.








