Feb 9, 2026
Thisaigal NewsYouTube
இந்தியாவுடனான உறவில் புதியதொரு சகாப்தத்தைப் படைத்துள்ளார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்: டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் புகழாரம்
தற்போதைய செய்திகள்

இந்தியாவுடனான உறவில் புதியதொரு சகாப்தத்தைப் படைத்துள்ளார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்: டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் புகழாரம்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி,09-

இந்தியாவுடன் எட்டப்பட்டுள்ள 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் வியூக ஒத்துழைப்பு ஆவணங்கள், ஆசியான் வட்டாரம் உட்பட உலகளாவிய அரங்கில் மலேசியாவை ஒரு முதன்மைப் பங்காளியாக நிலைநிறுத்துவதில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வாரின் தலைமைத்துவம் எவ்வளவு வலிமையானது என்பதைக் காட்டுகிறது என்று மனித வள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அன்வாரைப் பொறுத்தவரை, இந்தச் சாதனையானது வெறும் புள்ளி விவரங்கள் சார்ந்தது மட்டுமல்ல; மாறாக, மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளில் ஒரு புதிய அத்தியாயம் மலர்ந்திருப்பதையே இது பறைசாற்றுகிறது.

இது உலகளாவிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பன்மடங்கு அதிகரிப்பதோடு, ஆசியான் வட்டாரத்தில் மலேசியாவின் நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது என்றும் ரமணன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த 2025-ஆம் ஆண்டில் மலேசியா-இந்தியா இடையிலான இருதரப்பு வர்த்தகம் 79.49 பில்லியன் ரிங்கிட்டை எட்டியிருப்பது, இந்த வெற்றிக்கு மேலும் வலுசேர்ப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதன் மூலம், ஆசியான் நாடுகளில் இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக மலேசியா உருவெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இத்தகைய அபரிமிதமான வளர்ச்சியானது, பிரதமர் முன்னெடுத்துள்ள பொருளாதாரச் சீர்திருத்தங்கள், நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் உயர்தர நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் அவர் காட்டும் உறுதிப்பாட்டிற்கு கிடைத்த வெற்றியாகும் என்றும் ரமணன் புகழாரம் சூட்டினார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இந்த அதிகாரப்பூர்வ வருகையும், இரு நாட்டுத் தலைவர்களின் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்ட ஒத்துழைப்பு ஆவணங்களும், 'மடானி' அரசாங்கத்தின் கீழ் மலேசியாவின் ஸ்திரத்தன்மை குறித்து இந்தியா கொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, மின்னணு சில்லுகள் எனப்படும் Semiconductor துறையில் இரு அரசாங்கங்களுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள வியூகக் கூட்டுறவு, உலகளாவிய உயர் தொழில்நுட்பத் துறையின் மதிப்புச் சங்கிலியில் மலேசியா ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்வதைக் காட்டுகிறது என்றார் அவர்.

தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை கல்வியான (TVET), பெர்கேசோ (PERKESO) மற்றும் இந்தியாவின் மாநிலக் காப்பீட்டுக் கழகம் (ESIC) இடையிலான சமூகப் பாதுகாப்பு, பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் வெறும் அடையாளச் சடங்குகள் அல்ல என அவர் சுட்டிக் காட்டினார்.

இவை மனித மூலதன மேம்பாட்டிற்கும், குறிப்பாக 'அதிக வளர்ச்சி அதிக மதிப்பு' கொண்ட துறைகளில் நமது இளைஞர்களுக்கு தரமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் நேரடி அடித்தளமாக அமையும் என்று அவர் விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் அன்வாரின் அழைப்பின் பேரில் மலேசியாவிற்கு வருகை தந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று மாலை 4.35 மணியளவில் நாடு திரும்பினார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் பயணத்தின் போது இந்தியப் பிரதமருக்கான அதிகாரப்பூர்வ உடன் செல்லும் அமைச்சராகக் கடமையாற்றிய டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், பிரதமர் மோடியைக் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் முறைப்படி வழியனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ஷா ஆலம் வீட்டில் அழுகிய நிலையில் ஆண், பெண் சடலங்கள் மீட்பு

ஷா ஆலம் வீட்டில் அழுகிய நிலையில் ஆண், பெண் சடலங்கள் மீட்பு

மலேசிய ஒப்பந்தம் 1963 தொடர்பான 'டவுன் ஹால்' கூட்டத்திற்கு அமைச்சர் வரவேற்பு

மலேசிய ஒப்பந்தம் 1963 தொடர்பான 'டவுன் ஹால்' கூட்டத்திற்கு அமைச்சர் வரவேற்பு

மலாக்கா பேரங்காடியில் இளம் பெண்ணைக் கத்தியுடன் துரத்திய நபர் கைது

மலாக்கா பேரங்காடியில் இளம் பெண்ணைக் கத்தியுடன் துரத்திய நபர் கைது

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபர் கைது – போதைப் பொருட்கள் பறிமுதல்

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபர் கைது – போதைப் பொருட்கள் பறிமுதல்

நிறுவனத்தின் தினசரி செயல்பாடுகளில் நான் பங்கேற்கவில்லை – ஐஜேஎம் தலைவர் அறிவிப்பு

நிறுவனத்தின் தினசரி செயல்பாடுகளில் நான் பங்கேற்கவில்லை – ஐஜேஎம் தலைவர் அறிவிப்பு

அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை முறைப்படுத்தும் திட்டத்திற்கு தமது அமைச்சு ஆதரவு – ங்கா கோர் மிங் திட்டவட்டம்

அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை முறைப்படுத்தும் திட்டத்திற்கு தமது அமைச்சு ஆதரவு – ங்கா கோர் மிங் திட்டவட்டம்