கோலாலம்பூர், நவம்பர்.22-
தனது முன்னாள் கணவரின் வசம் உள்ள தனது மகளை மீட்டுக் கொடுக்கும்படி போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயிலை நேரடியாகச் சந்திப்பதற்கு பாலர் பள்ளி முன்னாள் ஆசிரியரான எம். இந்திராகாந்தி இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் வரை மேற்கொண்ட அமைதி ஆட்சேப ஊர்வலத்தில் அவரால் ஐஜிபியைச் சந்திக்க முடியவில்லை.
அருண் துரைசாமி தலைமையிலான இந்திராகாந்தி நடவடிக்கைக் குழுவினர் கிட்டத்தட்ட நூறு பேர், கோலாலம்பூர் சோகோவிலிருந்து பல்வேறு சுலோகங்களைத் தாங்கிய அட்டைகள் மற்றும் பதாகைகளை ஏந்திய வண்ணம் திட்டமிட்டப்படி இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தைச் சென்றடைந்தனர்.
தனது மகள் பிரசன்னா டிக்ஷாவைத் தேடிக் கண்டுபிடிப்பதில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவைப் போலீஸ் துறை அமல்படுத்தவில்லை என்று கூறி, தனது ஆட்சேபத்தைத் தெரிவிக்கும் வகையில் போலீஸ் படைத் தலைவரிடம் மகஜர் ஒன்றை வழங்குவதற்கு இந்திராகாந்தி திட்டமிட்டு இருந்தார்.
எனினும் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் முன்புறம் பிற்பகல் ஒரு மணியிலிருந்து 4 மணி வரை இந்திராகாந்தியும், அவரின் ஆதரவாளர்களும் காத்திருந்த நிலையில் அவர்களால் ஐஜிபியைச் சந்திக்க இயலவில்லை.
புத்ராஜெயா மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்டுள்ள ஐஜிபி தங்களைச் சந்திப்பதற்கு வந்து கொண்டு இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று இந்த அமைதி ஆட்சேப ஊர்வலத்திற்கு தலைமையேற்ற அருண் துரைசாமி தெரிவித்தார்.
எனினும் மாலை நான்கு மணி வரை, அவர்களால் ஐஜிபியைச் சந்திக்க இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஜிபியைச் சந்தித்து, மகஜர் ஒன்றை வழங்குவதுடன் தனது மகள் பிரசன்னாவுக்கு பிடித்தமான கரடி பொம்மையை ஒப்படைக்கவும் இந்திராகாந்தி திட்டமிட்டு இருந்தார்.








