சிரம்பான், ராசா ஜெயாவில் 63 வயது முதியவரான மாமனாரை துன்புறுத்தி தலையிலேயே அடித்து கொன்றதாக கணவன், மனைவி இருவர் மீது சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
32 வயது பி. பாலமுரளி, அவரது 34 வயது மனைவி எஸ். சங்கீதா ஆகிய இருவரும் கடந்த நவம்பர் 3ஆம் தேதி இரவு 11 மணியளவில் கே. பாலகிருஷ்ணன் என்ற ஊனமற்ற முதியவரை, ரப்பர் குழாயினால் தலையிலேயே அடித்து கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் இருவரும் கொலை குற்றச்சாட்டை எதிர் நோக்கியுள்ளனர்.
இதற்கிடையில், தீபாவளிக்கு சில தினங்களுக்கு முன்பு, அந்தத் முதியவர் சிலரால் மிக கொடூரமாக தாக்கப்படும் காணொளி டிக்டாக்கில் பரவியதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த முதியவரின் இறுதிச் சடங்கு நடைபெற்றபோது, காணொளியில் இடம்பெற்றவர் அவர்தான் என்பதை ஓர் அரசு சாரா அமைப்பின் பிரதிநிதி அடையாளம் கண்டுள்ளார். இதையடுத்து போலீசார் இறுதிச் சடங்கை நிறுத்தினர்.
இவ்வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.








