மக்களவைக்குத் தலைமை தாங்கியபடியே விவாதத்தில் பங்கேற்ற துணை சபாநாயகர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ரம்லி முஹமட் நோரின் முடிவை மறுஆய்வு செய்யக் கோரி, பக்காத்தான் ஹராப்பான், கம்பார் நாடாளுமன்ற உறுப்பினர் சோங் ஸெமின் மனு தாக்கல் செய்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை மக்களவையில் பொதுப்பணித்துறை அமைச்சின் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு மீதான விவாதத்தின்போது, கேமரன் ஹைலண்ட்ஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான ரம்லி, துணை சபாநயகர் இருக்கையில் இருந்தபடியே எழுந்து தனது கருத்துகளை முன்வைத்தார். இதற்கு பெலுரான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ரோனால்ட் கியாண்டி எதிர்ப்புத் தெரிவித்தார்.
பொதுப்பணித்துறைக்கான நிதி ஒதுக்கீடு, அரசாங்கத்தின் திட்டங்கள் மற்றும் அவற்றுக்கான செலவினங்கள் குறித்து நடைபெற்ற விவாதத்திலேயே ரம்லி பங்கேற்றார்.
நாடாளுமன்ற விதி 43-இன் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், அவைக்குத் தலைமை தாங்குபவர் அதே நேரத்தில் உறுப்பினர் என்ற முறையில் விவாதத்தில் பங்கேற்பது நாடாளுமன்ற நடைமுறைக்கு முரணானது என சோங் குறிப்பிட்டுள்ளார்.
விவாதத்தில் பங்கேற்க விரும்பும் துணை சபாநாயகர், முதலில் தலைமைப் பொறுப்பை மற்றொரு அதிகாரியிடம் ஒப்படைத்த பின்னரே பேச அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.








