கோலாலம்பூர், டிசம்பர்.17-
மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று இந்திய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் கொலையாக மறுவகைப்படுத்தியிருக்கும் சட்டத்துறை அலுவலகத்தின் முடிவை பெரிக்காத்தான் நேஷனல் இன்று வரவேற்றுள்ளது.
நாட்டின் இறையாண்மை, பொறுப்புக்கூறலின் முக்கியத்துவம் மற்றும் பொதுமக்களின் நம்பகத்தன்மையை பாதுகாப்பதற்கு இது போன்ற நடவடிக்கை முக்கியம் என்று பெரிக்காத்தான் நேஷனலின் நாடாளுமன்ற கொறடாவான டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று உயிர்கள் பலியாகியுள்ளன. எனவே எவ்வித பாரபட்சமின்றி வெளிப்படையான விசாரணை அவசியம் என்று பாஸ் கட்சியின் கோத்தா பாரு எம்.பி.யான தக்கியுடின் ஹசான் குறிப்பிட்டார்.
மேலும் மலாக்கா மாநில போலீஸ் துறையினர், இந்தச் சம்பவம் தொடர்பில் முக்கியச் சாட்சியான ஒரு பெண்ணின் தனிப்பட்ட மற்றும் குடும்பத் தகவல்களைப் பகிரங்கமாக வெளியிட்டது குறித்து அவர் கவலை தெரிவித்தார்.
போலீஸ் துறையின் இத்தகைய செயல், விசாரணை முடிவதற்கு முன்பே சாட்சிகள் மீது தவறான பிம்பத்தை உருவாக்கி பொதுக்கருத்தை மாற்றுவதற்கான முயற்சியாக அமையலாம் என்று அவர் எச்சரித்தார்.
இது போன்ற பகிரங்கக் கருத்துகள் பக்கச் சார்பற்ற விசாரணைக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தக்கியுடின் ஹசான் சுட்டிக் காட்டினார்.








