ஜார்ஜ்டவுன், அக்டோபர்.18-
மலேசிய இந்திய இளைஞர்களுக்கு ஓர் அடையாளத் தொகையாக சிறு நிதி உதவி வழங்கி உதவி செய்யாமல், இந்திய இளைஞர்களை மேம்படுத்துவதற்கும், அவர்கள் மத்தியில் நீடித்த உருமாற்றத்தை உருவாக்குவதற்கும் நல்லதொரு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தாருங்கள் என்று மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் கேட்டுக் கொண்டார்.
இந்திய இளைஞர்கள் நீடித்த உருமாற்றத்திற்கான நம்பிக்கையை விதைப்பதற்கு தமது மனித அமைச்சின் மூலமாக மிஸி எனப்படும் மலேசிய இந்திய திறன் முன்முயற்சித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மிஸியின் மூலம் பயிற்சிப் பெற்ற கிட்டத்தட்ட ஆயிரம் இந்திய இளைஞர்கள் பொறியலாளர்களாகவும், தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் உருவாகி உயர் வருமானத்தில் நல்லதொரு வேலை வாய்ப்புகளில் அமர்ந்துள்ளனர் என்று ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.
இந்தப் பயிற்சித் திட்டங்கள் வாயிலாக இந்திய இளைஞர்களின் எண்ணிக்கை ஐந்து ஆயிரம் முதல் பத்தாயிரமாக உயர்த்துவதற்கு அமைச்சு நோக்கம் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் தொடர்பில் டோக்கன் முறையில் நிதி வழங்குவதை நிறுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
நேற்று இரவு தமது தலைமையிலான மனித வள அமைச்சும், சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் ஸ்டீவன் சிம் இதனைத் தெரிவித்தார்.